சமுதாய அமைப்புகளைப் பாதிக்கும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான உதாரணங்கள்

சமுதாயத்தை வடிவமைப்பதிலும், ஆதரவளிப்பதிலும், முடிவெடுக்கும் செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதிலும் மற்றும் பல்வேறு குழுக்களை ஒன்றிணைப்பதிலும் சமுதாய அமைப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சமுதாய அமைப்புகள் கொண்டுள்ள விரிவான தொடர்பு வலைப்பின்னல்களும், அவை பெற்றுள்ள நம்பிக்கைக்குரிய உறவுகளும், சமுதாயத் தலைமைத்துவம் மற்றும் பொது ஈடுபாட்டில் அவற்றை முதன்மையான பங்குதாரர்களாக மாற்றுகின்றன.

மறைமுகமான, அச்சுறுத்தலான, ஏமாற்றுகிற அல்லது ஊழல் நிறைந்த செயல்களின் மூலம் சமுதாய அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் வெளிநாட்டுத் தலையீடுகள், அந்த அமைப்புகளின் தன்னாட்சியைப் பாதிப்பதுடன், சமுதாய நம்பிக்கையையும் சமூக ஒருமைப்பாட்டையும் சிதைக்கக்கூடும்.

மேலும், இத்தகைய தலையீடுகள் அந்த அமைப்பிற்கும் அதன் பரந்த சமுதாயத்திற்கும் உரிய பாதுகாப்பு, பத்திரத்தன்மை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

வெளிநாட்டுத் தலையீடுகள் சமுதாய அமைப்புகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதற்கான மூன்று உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உதாரணங்களில், "வெளிநாட்டு அரசு" என்பது நியூசிலாந்தைத் தவிர மற்ற நாடுகளைக் குறிக்கிறது.

இந்த உதாரணங்கள், நியூசிலாந்து பன்முக கலாச்சாரக் கூட்டமைப்பு, இனச் சமூகங்களுக்கான அமைச்சகத்துடன் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் அடிப்படையில் அமைந்தவை. இந்தத் தகவல் தொகுப்பிற்கும், ‘வெளிநாட்டுத் தலையீடுகளிலிருந்து உங்கள் சமுதாய அமைப்பைப் பாதுகாத்தல்’ எனும் தகவல் தொகுப்பிற்கும் அவர்கள் வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்பிற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்கள், 1961-ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டத்தின் (Crimes Act) கீழ் வெளிநாட்டுத் தலையீடாகக் கருதப்படக்கூடியச் செயல்பாடுகளை விளக்கும் கற்பனையான சூழல்கள் ஆகும்.

இவை பொதுவான தகவல்கள் மட்டுமே. இது உங்களின் புரிதலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, சட்ட ஆலோசனையல்ல. குறிப்பிட்ட சட்ட ஆலோசனைகளுக்கு, தகுதிவாய்ந்த சட்ட நிபுணரை அணுகவும்.

உதாரணம் 1: வெளிநாட்டு அரசின் சார்பாகச் செயல்படும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

ஒரு சமுதாய அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது நிர்வாகக் குழுத் தேர்தலை நடத்துகிறது. சமுதாயத்தினருடன் கலந்துரையாடி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின்னர் இரண்டு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலுக்குப் பிறகு, இந்த இரண்டு உறுப்பினர்களும் தாங்கள் பிறந்த நாட்டின் அரசாங்கத்தின் பதிலாள்களாக (proxies) செயல்பட்டனர். அவர்கள் அந்த வெளிநாட்டு அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டனர், மேலும் இந்தத் தொடர்பு அந்த அமைப்பிற்குத் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

அந்த இரண்டு உறுப்பினர்களும், வெளிநாட்டு அரசின் நலன்களுக்கு முரணாக இருந்த சில சமுதாயப் பிரச்சினைகளைத் திட்டமிட்டு ஒடுக்க முயன்றனர். அவர்கள் தங்கள் செயல்களை அமைப்பின் சாதாரண முடிவெடுக்கும் செயல்முறையாகக் காட்டிக் கொண்டனர், ஆனால் உண்மையில் அவர்கள் வஞ்சகமான முறையில் அந்த வெளிநாட்டு அரசாங்கத்தின் நலன்களை முன்னெடுக்க முயன்றனர்.  மேலும், அவர்கள் தங்களது கருத்துகளுடன் உடன்படாத மற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, அந்த வெளிநாட்டு அரசின் கொள்கைகளுக்கு ஆதரவான கருத்துகளைத் தீவிரமாகப் பரப்பினர்.

மற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தாங்கள் சமுதாய மக்களின் கருத்துகளையே பிரதிபலிப்பதாகக் கூறியபோது, இந்த இரண்டு உறுப்பினர்களும் அவர்களை எதிர்த்து, "அவர்கள் யார்?" எனக் கேள்வி எழுப்பியதோடு, அந்தச் சமுதாய உறுப்பினர்களின் தனிப்பட்ட ரகசியத் தகவல்களையும் கோரினர். இந்தப் புதிய உறுப்பினர்கள் வெளிநாட்டு அரசின் பதிலாள்களாகச் செயல்படலாம் எனச் சந்தேகித்த மற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அத்தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.

நிர்வாகக் குழு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விவாதத்திற்குரிய விவகாரங்களைத் தொடர்ந்து, மற்ற குழு உறுப்பினர்களுக்குச் சமூக ஊடகங்களில் அநாமதேய மிரட்டல்கள் வந்ததால், புதிய உறுப்பினர்கள் வெளிநாட்டு அரசிற்குத் தகவல்களைத் ரகசியமாகத் தெரிவிக்கக்கூடும் என்று அந்த அமைப்பு சந்தேகித்தது. இந்தக் கூட்டங்கள் பொதுமக்களுக்கோ அல்லது சமுதாய உறுப்பினர்களுக்கோ பொதுவானவை அல்ல, மேலும் அங்கு விவாதிக்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

ஒரு வெளிநாட்டு அரசு, தனது நலன்களுக்கு முரணான கருத்துகளை ஒடுக்குவதற்கும், அந்த அமைப்பின் உள்முடிவுகளில் ரகசியமாகத் தலையிடுவதற்கும் தனது பதிலாள்களைப் பயன்படுத்தியது.

கருத்துகளை ஒடுக்குவதற்கான திட்டமிட்ட முயற்சிகள், அந்தச் சமுதாயத்தின் கருத்துச் சுதந்திரத்தைச் சீர்குலைக்கின்றன.

தனிப்பட்ட தகவல்களைக் கோருவது சமுதாய உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும்.

'பதிலாள் அல்லது பதிலாள்கள்' (Proxies) என்பது வெளிநாட்டு அரசின் சார்பாகப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு தனிநபர் அல்லது குழுவைக் குறிக்கும்; இவர்கள் பெரும்பாலும் நியூசிலாந்திற்குள்ளேயே அமைந்திருப்பார்கள்.

உதாரணம் 2: ஒரு சமுதாய நிகழ்வில் யார் பங்கேற்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள்

ஒரு சமுதாய அமைப்பு, நியூசிலாந்தில் தனது பாரம்பரியம், அடையாளம் மற்றும் சமுதாய வரலாற்றைக் கொண்டாடும் வகையில் வருடாந்திர கலாச்சார விழாவை ஏற்பாடு செய்து கொண்டிருந்தது.

ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதி எனப் பரவலாக அறியப்பட்ட நபர் ஒருவர், அந்த நாட்டின் "நலன்களுக்கு எதிராக" இருப்பதாகக் கருதப்படும் சில குறிப்பிட்ட சமுதாய உறுப்பினர்களை விழாவிலிருந்து விலக்கி வைக்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

ஏற்பாட்டாளர்கள் இதற்கு இணங்காவிட்டால், தான் சமுதாயத்தின் செல்வாக்கு மிக்கத் தலைவர்களை அணுகி, அந்த அமைப்பைப் பகிரங்கமாக விமர்சிக்கச் செய்வேன் என்றும், எதிர்மறையான செய்திகளைப் பரப்புவேன் என்றும், சமுதாயத்தில் அந்த அமைப்பிற்கு இருக்கும் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்.

இத்தகைய செயல்கள், நியூசிலாந்து அரசு முகமைகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து சமுதாய நிதியைப் பெறுவதற்கான அந்த அமைப்பின் திறனைப் பாதிக்கும் என்பதை அந்த வெளிநாட்டு அரசு அறிந்திருந்தது.

தங்களின் உள்ளடக்கிய விழுமியங்களுக்கு எதிராகச் செயல்பட வைப்பதற்கும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் தலையிடுவதற்கும் இத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்படுவதை அந்த அமைப்பு உணர்ந்தது. யாரையும் விலக்கி வைக்க அந்த அமைப்பு மறுத்துவிட்டது, இருப்பினும் தங்களின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறித்து அது கவலை கொண்டது.

ஒரு வெளிநாட்டு அரசு, ஒரு சமுதாய அமைப்பின் உள்ளடக்கிய விழுமியங்களுக்கு முரணான முடிவுகளை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியது. இதற்காக அந்த அரசு கட்டாயப்படுத்துதல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் மிரட்டல்களைப் பயன்படுத்தி, மக்களின் சமுதாயப் பங்களிப்பைக் கட்டுப்படுத்த முற்பட்டது.

அந்த வெளிநாட்டு அரசு தனது சொந்த இலக்குகளை அடைவதற்காக ஒரு சமுதாய அமைப்பில் தலையிட்டது; மேலும், அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சியே, அந்த அமைப்பு நியூசிலாந்து சமுதாயத்தில் முழுமையாகப் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகிறது.

உதாரணம் 3: சமுதாய உறுப்பினர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற நிதி மற்றும் பரிசுகளைப் பயன்படுத்தப்படுதல்

புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு, தனது சமுதாயத்திற்குள் தனது செல்வாக்கையும் நற்பெயரையும் வளர்த்து வந்தது.

அந்த அமைப்பினர் தாங்கள் பிறந்த நாட்டின் தூதரகத்தைச் சந்திக்க அழைக்கப்பட்டனர், அவர்களும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டனர். தங்கள் பணி அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர், மேலும் தூதரகத்துடன் ஒரு நல்லுறவை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இதைக் கருதினர்.

அந்தச் சந்திப்பில், அமைப்பிற்குத் தொடர்ச்சியான நிதி உதவியும், தனிப்பட்ட உறுப்பினர்களுக்குப் பரிசுகளும் வழங்க முன்வந்தனர். மேலும், அமைப்பின் செயல்பாடுகளுக்குத் தூதரகத்தின் பகிரங்க ஆதரவும் வழங்கப்பட்டது. தூதரகத்திடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் அந்த அமைப்பு பாராட்டிக் ஏற்றுக்கொண்டது. காலப்போக்கில், அந்த அமைப்பின் சில செயல்பாடுகள் இந்த நிதி உதவியைச் சார்ந்தே அமையும் நிலை உருவானது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாங்கள் வழங்கிய ஆதரவிற்காக அந்த அமைப்பு தங்களுக்கு "கடமைப்பட்டுள்ளது" எனக் கூறி, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றும் சமுதாய உறுப்பினர்களின் தனிப்பட்ட ரகசியத் தகவல்களைத் தூதரகம் கோரியது.

தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு அந்த அமைப்பு கட்டாயப்படுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வந்தது, ஆனால் அவர்கள் அதனைத் தர மறுத்துவிட்டனர். இதனால் தூதரகத்தின் ஆதரவு நிறுத்தப்பட்டது, இது அந்த அமைப்பின் சில செயல்பாடுகளைப் பாதித்தது.

ஒரு வெளிநாட்டு அரசு, ஒரு அமைப்பின் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு பரிசுகளையும் நிதியையும் பயன்படுத்தியது; பின்னர் சமுதாய உறுப்பினர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பெற முயன்றது.

இது தகவல்களைத் திரட்டுவதற்கும், வெளிநாட்டு அரசின் சொந்த நோக்கங்களுக்காக அமைப்பின் முடிவுகளில் தலையிடுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு கட்டாயப்படுத்தும் முயற்சியாகும்.

இந்த தகவலை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும். - விரைவில் வருகிறது