நியூசிலாந்து காவல்துறை, மக்கள் தங்கள் வீடுகளிலும், நமது சாலைகளிலும், அவர்களின் சமூகங்களிலும் பாதுகாப்பாக இருப்பதையும், பாதுகாப்பாக உணருவதையும் உறுதி செய்யும் சேவைகளை வழங்குகிறது. காவல்துறை 24 மணி நேரமும் குற்றச்செயல்கள் மற்றும் தீங்குகளை குறிவைத்து தடுப்பதில் தீவிரமாக செயல்படுகிறது. சுமார் 15,000 ஊழியர்களுடன், நாங்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலையங்கள் மற்றும் பெரிய காவல் மையங்களிலிருந்து பணிபுரிகிறோம்.
நாங்கள் நிலம், கடல் மற்றும் வான்வழியாக செயல்படுகிறோம். மேலும் ஆண்டிற்கு 1.3 மில்லியனுக்கும் அதிகமான நிகழ்வுகளுக்கு பதிலளிக்கிறோம் – 925,000-க்கும் மேற்பட்ட 111 அழைப்புகளுக்கும் 743, 000-க்கும் மேற்பட்ட அவசரமற்ற அழைப்புகளுக்கும் பதிலளிக்கிறோம்.
காவல்துறை ஊழியர்கள் நியூசிலாந்தில் உள்ள அனைவருக்கும் உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் பயிற்சி பெற்றுள்ளனர். காவல் சேவைகள் மனித உரிமைகளை மதிக்கும் வகையிலும், சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் வழங்கப்படுகின்றன.
காவல்துறையினரின் முக்கியப் பணிகளில் குற்றச் செயல்களை குறைத்தல், தடுத்தல், விசாரணை செய்தல், தீர்வு காணுதல், மற்றும் சாலை விபத்துகளைத் தடுத்தல் ஆகியவை அடங்கும். காவல்துறையின் செயல்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
- அமைதியைப் பேணுதல்
- பொதுப் பாதுகாப்பைப் பராமரித்தல்
- சட்ட அமலாக்கம்
- குற்றத் தடுப்பு
- சமூக ஆதரவு மற்றும் உறுதியளித்தல்
- தேசிய பாதுகாப்பு
- நியூசிலாந்திற்கு வெளியே காவல் பணிகளில் பங்கேற்பது
- அவசர மேலாண்மை.
இன தொடர்பு அதிகாரிகள்
காவல்துறை நாடு முழுவதும் இன தொடர்பு அதிகாரிகளைக் கொண்டிருப்பதன் மூலம் பன்முகத்தன்மையை மதிக்கிறது மற்றும் இன சமூகங்களை ஆதரிக்கிறது. அவர்கள் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றி, காவல் சேவைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை அணுகவும் உதவுகிறார்கள். சமூகக் அக்கறைகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்குத் வழங்குகிறார்கள், மேலும் இன சமூகங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிப்பதிலும் தடுப்பதிலும் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
எங்கள் ஊழியர்கள் உங்கள் கவலைகளைக் கேட்கவும், பாதுகாப்பை மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
உங்களுக்கோ அல்லது பிறருக்கோ பயத்தை ஏற்படுத்தும் வகையில் நேரிலோ அல்லது ஆன்லைனிலோ உங்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால், தயவுசெய்து காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும். இனம், நம்பிக்கை, பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், இயலாமை அல்லது வயது ஆகியவற்றின் அடிப்படையில் பகைமையால் தூண்டப்படும் எந்தச் சம்பவமும் இதில் அடங்கும்.
அனைத்து நியூசிலாந்து மக்களும் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகத்திற்கிடமான அல்லது வழக்கத்திற்கு மாறான நடத்தையை அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும்.
111 காவல்துறை அவசரநிலை:
பின்வரும் சூழ்நிலைகளில் 111 ஐ அழைத்து காவல்துறையை கேளுங்கள்:
- மக்கள் காயமடைந்திருந்தால் அல்லது ஆபத்தில் இருந்தால்; அல்லது
- உயிருக்கு அல்லது சொத்துக்கு கடுமையான, உடனடி அல்லது உடனடியாக நிகழக்கூடிய ஆபத்து இருந்தால்; அல்லது, ஒரு குற்றம் நடந்து கொண்டிருக்கிறது அல்லது இப்போதுதான் செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகள் இன்னும் சம்பவ இடத்திலேயே இருக்கிறார்கள் அல்லது இப்போதுதான் வெளியேறிவிட்டார்கள்.
105 காவல்துறை அவசரமற்ற புகாரளித்தல்:
தகவல் நேரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றால், மக்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது வழக்கத்திற்கு மாறான நடத்தை குறித்து தங்கள் உள்ளூர் காவல்துறைக்கு பின்வருமாறு புகாரளிக்கலாம்:
நீங்கள் காவல்துறையிடம் பேச வேண்டுமென்றால், எந்த மொபைல் அல்லது லேண்ட்லைனிலிருந்தும் 105-ஐ அழைக்கவும். இது நாடு முழுவதும் கிடைக்கும் 24/7 இலவச சேவை ஆகும். உங்களால் 105-ஐத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், https://www.police.govt.nz/use-105 என்ற முகவரியில் எங்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும்.