வெளி நாட்டுத் தலையீட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தீங்கிழைக்கும் அல்லது சட்டவிரோதச் செயல்களைப் புகாரளித்தல் Reporting harmful or illegal activities that may be linked to foreign interference
வெளி நாட்டுத் தலையீட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தீங்கிழைக்கும் அல்லது சட்டவிரோதச் செயல்களைப் புகாரளித்தல்
குறிப்பு: இது பொதுவான தகவல் மட்டுமே. இது உங்களின் புரிதலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, சட்ட ஆலோசனையல்ல.
குறிப்பிட்ட சட்ட ஆலோசனைகளுக்கு, தகுதிவாய்ந்த சட்ட நிபுணரை அணுகவும்.
வெளிநாட்டுத் தலையீட்டின் ஒரு பகுதியாக, வெளி நாட்டு முகவர்களால் முன்னெடுக்கப்படும் சில தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே நியூசிலாந்து சட்டத்தின் கீழ் குற்றங்களாகும்.
இத்தகைய நடவடிக்கைகள் நடைபெறும் பட்சத்தில் அல்லது அவை நடைபெறக்கூடும் என்று நம்புவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், அவை குறித்து நியூசிலாந்து காவல்துறைக்கோ (NZ Police) அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸ் நியூசிலாந்து அமைப்பு மூலமாகப் பெயர் குறிப்பிடாமலோ புகார் அளிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை வெளிநாட்டுடன் தொடர்புடையது என்றோ அல்லது அது வெளிநாட்டுத் தலையீடு என்றோ நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமில்லை; ஏனெனில், அந்த நடவடிக்கை தனிப்பட்ட முறையிலேயே ஏற்கனவே ஒரு குற்றமாக இருக்கலாம்.
ஒரு நடவடிக்கையின் தோற்றுவாய் அல்லது அதில் வெளிநாட்டின் தலையீடு இருக்கிறதா என்பது தெரியவில்லை என்றாலும், நியூசிலாந்து காவல்துறை அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பிடம் புகார் அளிக்கலாம். நியூசிலாந்து காவல்துறை நிலைமையை ஆராய்ந்து, மேற்கொண்டு நடவடிக்கை தேவையா என்பதைத் தீர்மானிக்கும்.
இத்தகைய நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
- மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள்
- ஏதோ ஒன்றைக் கூறி மிரட்டுதல்
- பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல்
- துன்புறுத்தல்
- தாக்குதல் மற்றும் அது சார்ந்த வன்முறைகள்
- ஊடுருவல் மற்றும் அனுமதியற்ற அணுகல் போன்ற இணையக் குற்றங்கள்
- தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்ட டிஜிட்டல் வழித் தொடர்புகள் (உதாரணமாக மின்னஞ்சல்கள், சமூக ஊடக உள்ளடக்கங்கள் அல்லது இணைய சமூக மன்றங்களில் இடப்படும் பதிவுகள்) தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அமைந்திருப்பின் தண்டனைக்குரிய குற்றங்களாக அமையலாம்.
தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் வழித் தொடர்புகள் குறித்து மேலும் அறிய நியூசிலாந்து காவல்துறையின் இணையதளத்தைப் பார்க்கவும்.
நியூசிலாந்து காவல்துறையிடம் குற்றங்கள் குறித்துப் புகாரளித்தல்
ஓர் அவசர நிலை மற்றும் தற்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், 111-ஐ அழைத்து நியூசிலாந்து காவல்துறையைக் கோரவும்.
அவசர நிலை இல்லையென்றால், பின்வரும் வழிகளில் நீங்கள் நியூசிலாந்து காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்:
- 105 என்ற இணையவழிப் படிவத்தைப் பயன்படுத்துதல்.
- எந்தவொரு கைபேசி அல்லது நிலவழித் தொலைபேசியிலிருந்தும் 105-ஐ அழைத்தல்; இச்சேவை நாடு முழுவதும் 24 மணிநேரமும் இலவசமாகக் கிடைக்கும்.
உங்கள் புகாரைச் செயல்படுத்தவும், உங்களைத் தொடர்பு கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்கவும் 105 படிவம் உங்களின் சில தனிப்பட்ட தகவல்களைக் கோரும். நியூசிலாந்து காவல்துறை இத்தகவல்களை அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும்.
க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பிடம் பெயர் குறிப்பிடாமல் புகாரளித்தல்
நியூசிலாந்து க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பு மூலம் உங்கள் பெயரை வெளிப்படுத்தாமல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
க்ரைம் ஸ்டாப்பர்ஸ் என்பது ஒரு சுதந்திரமான அறக்கட்டளையாகும். இது குற்றங்கள் அல்லது பிற தீவிரமான கவலைகள் குறித்து குடிவரவுத் துறை, சுங்கத் துறை மற்றும் நியூசிலாந்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்க பாதுகாப்பான மற்றும் எளிமையான வழியை வழங்குகிறது.
நியூசிலாந்தில் நிகழ வாய்ப்புள்ள வெளிநாட்டுத் தலையீடு குறித்த தகவல்களும் இதில் அடங்கும்.
நீங்கள் இணையவழிப் படிவத்தைப் பயன்படுத்திப் பெயர் குறிப்பிடாமல் ஒரு புகாரைச் சமர்ப்பிக்கலாம் அல்லது 0800 555 111 (வெளிநாட்டிலிருந்து என்றால் +64 9 927 3971) என்ற எண்ணிற்கு அழைத்து க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பிடம் பேசலாம்.
உங்கள் அடையாளம் அதிகாரிகளுடன் பகிரப்பட மாட்டாது.
பெயர் குறிப்பிடாமல் அளிக்கப்படும் புகார் நியூசிலாந்து காவல்துறைக்கு முக்கியமான தகவல்களை வழங்கக்கூடும் என்றாலும், ஒரு முறையான விசாரணையை நடத்துவதற்குத் தேவையான போதிய தகவல்களை அது வழங்காமல் போகலாம் என்பதையும், அது ஒரு முறையான புகாராகக் கருதப்படாது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
வெளிநாட்டு லஞ்ச ஊழல் குறித்துப் புகாரளித்தல்
ஒரு நபர் அல்லது நிறுவனம், ஓர் வெளிநாட்டு அரசு அதிகாரி தனது அலுவல் ரீதியான பணிகளைச் செய்யும் விதத்தில் செல்வாக்கு செலுத்துவதற்காக, அவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வருவது, கொடுப்பது அல்லது கொடுப்பதாக வாக்களிப்பது வெளிநாட்டு லஞ்ச ஊழல் எனப்படும்.
வெளிநாட்டு நபர்களால் நியூசிலாந்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முன்வருதல், கொடுத்தல் அல்லது கொடுப்பதாக வாக்களித்தல் ஆகியவையும் அந்நிய நாட்டு லஞ்ச ஊழலாகும். வெளிநாட்டுத் தலையீட்டை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளோ அல்லது அவற்றின் பதிலாள்களோ இத்தகைய லஞ்ச ஊழல்களைக் கையாளலாம்.
வெளிநாட்டு லஞ்ச ஊழல் நடப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், தீவிர மோசடி அலுவலகத்தின் பெயர் வெளியிடாத புகாரளிக்கும் வசதி மூலம் ரகசியமாகப் புகாரளிக்கலாம்: வெளிநாட்டு லஞ்ச ஊழல் குறித்துப் புகாரளிக்கவும் - தீவிர மோசடி அலுவலகம், நியூசிலாந்து